புலம்பெயர்தல்

ஆஸ்திரேலிய ஓவியர் Shaun Tanஇன் கிராஃபிக் நாவலான The Arrival (2007) நம்மை வேறொரு உலகத்திற்குக் கொத்திக்கொண்டு போகிறது என்று சொன்னால் க்ளீஷேயாக இருக்கும். ஆனால் முதல் சில பக்கங்களிலேயே அவர் அதைத்தான் செய்துவிடுகிறார். செபியா டோனில் வரைந்த ஓவியங்களில் அவர் உருவாக்கியிருக்கும் உலகம் நம் உலகத்திற்கான உருவகம். முதலில் பாப் சர்ரியலிசம் என்று சொல்லப்படும் எரிச்சலூட்டும் (எனக்கு) ஓவிய பாணி போல் தெரிந்தாலும் ஷான் டான் ஃபான்டசி வரைகிறேன் பேர்வழி என்று பிலிம் காட்டவில்லை. போஷ் (Hieronymous Bosch), புரூகெல் (Pieter Bruegel the Elder) ரேஞ்சிற்கு அடிபோடுகிறார். ஷான் டானின் கற்பனை பிரமிப்பூட்டுவதோடு சில்லிடவும் வைக்கிறது.

இது வார்த்தைகள் இல்லாத புத்தகம் (மொழிபெயர்ப்புச் செலவில்லாமல் தமிழில் கொண்டுவரலாம்!). வழக்கமான காமிக்ஸ்/கிராஃபிக் நாவல்களிலிருந்து மாறுபட்ட பேனல் வடிவமைப்பு, புலம்பெயர்ந்த ஒருவனின் கதை என்பதாலோ என்னவோ பாஸ்போர்ட் புகைப்பட ஸ்ட்ரிப்களை நினைவுபடுத்துகிறது. நிறைய முழுப்பக்கப் படங்கள். சூழ்நிலைகளைச் சிறு விவரணைகளால் (details) உணர்த்துகிற, ஆனால் பகட்டு இல்லாத சாமர்த்தியம். ஒவ்வொரு படத்திலும் உள்ள விவரணைகளைப் பார்த்து ரசிக்கவே நிறைய நேரம் ஆகும். பல முறை பார்க்க வேண்டிய புத்தகம் இது. வெளியீடு: ஸ்கோலாஸ்டிக் நிறுவனத்தின் Arthur A. Levine Books. 128 பக்கங்கள். சும்மா புரட்டிப் பார்த்ததில் கிடைத்த மனப்பதிவை இங்கே தந்திருக்கிறேன். முழு புத்தகத்தையும் படித்த பின்பு மதிப்புரை உண்டாகலாம்.3 responses to “புலம்பெயர்தல்”

  1. தமிழில் (முழி பெயர்ப்பு செலவில்லாமல்) வெளியிடலாம் தான்.

    ஆனால் யார் வாங்குவார்கள்?

  2. புதிய இணையதள டிசைன் மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக இந்த தளத்தின் தன்மைகேற்ப இருப்பதாக படுகிறது.