பணவீக்கத்தின் அழகியல்

ஜெர்மனியில் 1921 முதல் 1923 வரை பொருளாதாரத்தைத் தலைகீழாக்கிய பயங்கரப் பணவீக்கத்தின்போது அச்சடிக்கப்பட்ட Notgeld (நெருக்கடிக் காலப் பணம்) காகிதப் பணம். இவற்றை வங்கிகள், நகராட்சிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் அச்சடித்தன. மேலும் விவரங்கள் இடுகையின் இறுதியில்.

1922 மார்ச்சில் வந்த 2 மார்க் நோட்டு. பின்னால் ‘இரண்டு மார்க் மதிப்புள்ளது’ (Gut fur zwei mark) என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. 1830இல் பெர்லினில் இருந்த டாக்சியைக் காட்டுகிறது…

notgeld1

கீழ்க்கண்டது ஜேனா நகரத்தின் 75 ஃபென்னிக் நாட்கெல்டு நோட்டு. மே 1921இல் வெளியிடப்பட்டது. படத்தில் ஜாடியில் தேள், தவளை மற்றும் பிற சவராசிகளுடன் காட்சியளிப்பவர் ஜெர்மன் உயிரியலாளர் Ernst Haeckel.

கீழே: முன்பு ஜெர்மனியில் Kandrzin-Pogorzelletz என்ற ஊராக இருந்து 1945க்குப் பிறகு போலந்தின் பகுதியாகிவிட்ட ஊரின் அரை மார்க் நாட்கெல்டு நோட்டு. இப்போது இந்த ஊரின் பெயர் Kędzierzyn. Einst jetzt என்றால் அன்றும் இன்றும். ஆண்டு நோட்டில் இல்லை…

நடு ஃப்ராங்க்கோனியா மாவட்டத்தின் தலைநகரான ஆன்ஸ்பாக்கின் ஆயிரமாண்டு நிறைவை (1321-1921) கொண்டாடும் 1921ஆம் ஆண்டு 75 ஃபென்னிக் நோட்டு. படத்தை வரைந்தவர்/செதுக்கியவர் Willy Flach:

அடுத்து வருவது ஆட்டர்ன்டோர்ஃப் நகர நோட்டு. மே 1920இல் வெளியிடப்பட்டது –

ஷ்வைக் (Schweich) நகராட்சியின் 50 ஃபென்னிக் நோட்டு, ஆகஸ்ட் 1921 வெளியீடு:

Orlamünde என்ற ஊரின் 50 ஃபென்னிக் நோட்டில் ஓவியமே வரைந்துவிட்டார்கள். ஓவியர் இனிஷியல் புரியவில்லை. படத்தில் இருப்பது மார்ட்டின் லூதரும் அவருக்கு முனைவர் பட்டம் கொடுத்த கிறித்தவ தத்துவ அறிஞர் ஆந்திரியாஸ் கார்ல்ஸ்டாட்டும். செப்டம்பர் 1921 வெளியீடு –

Gernrode என்ற ஊரின் 75 ஃபென்னிக் நோட்டின் முன்புறம். அக்டோபர் 1921இல் வெளியிடப்பட்டது –

பின்புறம் –

கீழிருப்பது ஜெஸ்னிட்ஸ் என்ற ஊரின் 25 ஃபென்னிக் நோட்டு. ஓவியத்தை வரைந்தவர் அந்தக் காலத்தில் முக்கியமான ஓவியரான Adolf Forker. குழந்தைகள் புத்தகங்களுக்கு அழகான படங்களை வரைந்திருக்கிறார். செப்டம்பர் 1921 வெளியீடு. இது முன்புறம் –

பின்புறம் –

Rudolstadt என்ற ஊரின் 50 ஃபென்னிக் நோட்டு. 1922 ஜனவரி வெளியீடு. முன்புறம் –

பின்புறம் –

மினியேச்சர் போஸ்டர்கள் போல, புத்தக அட்டைகள் போல, தீப்பெட்டி லேபிள்கள் போல் இருக்கும் இந்த நோட்டுகள் முற்றிலும் சட்டபூர்வமாகச் செல்லுபடியானவை அல்ல. ஆனால் அந்தந்த இடத்தில் ஒரு ‘அண்டர்ஸ்டாண்டிங்கில்’ ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அச்சடித்தவர்கள் தங்கள் விமர்சனங்கள், சமூகப் பார்வை, நகைச்சுவை எல்லாவற்றையும் அந்த நோட்டுகளில் வாரிக் கொட்டினார்கள். சில நோட்டுகளைக் கேலிச் சித்திரங்கள் அலங்கரித்தன. அடர்த்தியான கோடுகள், வண்ணங்கள், அழகான சித்திரங்கள் என்று கண்ணைக் கவரும் குட்டிக் கலைப் படைப்புகளாக இருந்தன இவை.

நாட்கெல்டு துணி, தோல், நாணயங்கள், அஞ்சல் தலைகள், பீங்கான் போன்றவற்றிலும் அச்சிடப்பட்டது!

பணவீக்கம் உச்சத்தை எட்டியபோது பலர் தங்களது சம்பளத்தை தள்ளுவண்டிகளில் வீட்டுக்கு எடுத்துச் சென்றார்கள். ஒரு முட்டை வாங்கப் பல மில்லியன் மார்க்குகள் தேவைப்பட்டன. A nation of millionaires என்று ஜெர்மனி பெயர் வாங்கிவிட்டிருந்தது. பணத்திற்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது (எ.கா.). இந்தப் பணவீக்கம் நாஜிக் கட்சியின் பிரச்சாரத்திற்கு மிகவும் உதவியது.

பர்சனல்: நாட்கெல்டு பற்றி முதலில் எனக்குத் தெரியவந்தது All Quiet on the Western Front புகழ் Erich Maria Remarque எழுதிய The Black Obelisk என்ற நாவலைப் படித்தபோது. நாவல் முழுதும் இந்தப் பணவீக்கத்தின்போது நடக்கும். மிக நகைச்சுவையுடன் (சில சமயங்களில் அலுப்பூட்டும் தத்துவ விசாரங்களுடன்) எழுதப்பட்ட இந்த நாவலில் பணவீக்கத்தைப் பற்றிய நம்ப முடியாத வர்ணனைகள் இருக்கும்.

நாட்கெல்டு நோட்டுகளுக்கு இப்போது பெரும்பாலும் அதிகம் மதிப்பு இல்லை. இங்கு ஸ்கேன் செய்து போட்டிருக்கும் நோட்டுகளை இணையத்தில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

தகவல்களுக்கு:

Inflation in the Weimar Republic

Notgeld கண்காட்சி

தாதா கலைஞர் Hans Richter எடுத்த குறும்படம்

A look at German inflation 1914-19244 responses to “பணவீக்கத்தின் அழகியல்”

  1. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த போது, மக்கள் கட்டு கட்டாக ஆப்கன் பணத்தை வண்டிகளில் கொட்டி எடுத்து செல்லுவதையுடத அதை எடை போடுவதையும் பத்திரிக்கை படங்களில் பார்த்த நியாபகம் வருகிறது. அந்த சோகமான கால கட்டத்திலும் ஜெர்மானிய ஓவியர்களை தங்கள் கற்பனை திறனை தட்டி எழுப்பி எத்தகைய கலோக்கியலான விஷயங்களை தீட்டி இருக்கிறார்கள். ஓவியங்கள் கால சூல்நிலையை தாண்டி ஒரு கலைநுணுக்கம் இருப்பது திறம்பட தெரிகிறது.

    மிக அறிய ஓவியங்களின் படையல். பகிர்ந்தமைக்கு நன்றி சாத்தான் நண்பரே.

    ÇómícólógÝ

  2. இந்த நோட்டுகளில் இருக்கும் சில படங்கள் சில நூறாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டிருக்கலாம்.

  3. அது இன்னும் சிறப்பு இல்லையா….? ஓவியங்கள் எப்போது பார்க்கினும் அக்காலகட்டத்துக்கு தகுந்தாற்போல தெரிவது 🙂

    • ரஃபிக், நீங்கள் போட்டது நூறாவது கமென்ட். உங்கள் நண்பர்கள் உங்களிடம் ட்ரீட் கேட்கப்போகிறார்கள். 🙂 நீங்கள் சொல்வது போல் அந்தக் காலகட்டத்திற்கு அது பொருத்தமாகத்தான் இருந்தது. ஜெர்மனியில் பல கலை இயக்கங்கள் தோன்றிய பின் மரபுக் கலைகள் எல்லாம் கொஞ்சம் பின்னால் போயிருக்கும்.